கூட்டணி ஆட்சி பக்குவம் பிரதமருக்கு இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்

கூட்டணி ஆட்சி பக்குவம் பிரதமருக்கு இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்
Updated on
1 min read

திண்டுக்கல்: பிரதமர் மோடிக்கு கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்வது தவறானது. இடைத்தேர்தலைச் சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை. காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

மோடிக்கு கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் இருக்குமா என்பது தெரியாது. எதேச்சதிகாரமாக ஆட்சியை நடத்திப் பழக்கப்பட்டவர், கூட்டணி ஆட்சியை எத்தனை நாட்களுக்கு நடத்தப்போகிறார் என்பது தெரியவில்லை.

ஒரு தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எப்படி வர முடியும்? எதனால் குறைபாடு ஏற்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கெனவே ரயில்வே அமைச்சராக இருந்தவர்தான், தற்போதும் அமைச்சராக இருக்கிறார். இந்த விபத்துக்கு மத்திய அரசும், ரயில்வே துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். விபத்துக்கு உரிய காரணம் கூறாத ரயில்வே அமைச்சர், பதவி விலக வேண்டும்.

நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளன. உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. தற்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பிஹார் போன்ற மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே, மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாப்பு அளிக்கும். இதை எதிர்ப்போர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in