

`இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கைது' தொடர்பான செய்திக்கு வஹ்தத் இ-இஸ்லாமிய என்ற அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக `தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த 14-ம் தேதி வெளியான செய்தியில், கைது செய்யப்பட்டவர்கள் வகாதி இ இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தனிப்படை போலீஸார் கூறியதாகக் குறிப்பிடப்பட்டது.
அதற்கு, கோவையில் உள்ள வஹ்தத் இ-இஸ்லாமிய என்ற அமைப்பு மறுப்பு தெரிவித்து கடிதம் அளித்துள்ளது. அதில் 'செய்தியில் குறிப்பிட்டுள்ள நபர்கள் எங்களது அமைப்பில் உறுப்பினராகக் கிடையாது.
எங்களது அமைப்பின் நடவடிக்கைகளில் அவர்கள் பங்கு பெறுவதும் கிடையாது. இஸ்லாமிய சமூகத்தில் நட்பு உணர்வை வளர்ப்பதற்காகவும், இஸ்லாமிய கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே இது.
இந்த அமைப்பு மிகவும் வெளிப்படையாக, பொது தளத்தில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூகப் பணி ஆற்றி வருகின்றது' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதேபோல் வஹ்தத் இ-இஸ்லாமி அமைப்பின் தமிழக செயலர் முகமது தாஜுதீன் அளித்துள்ள கடிதத்திலும், `இது அகில இந்திய இஸ்லாமிய இயக்கம். இஸ்லாமின் கொள்கைகளை முஸ்லிம்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் இந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது.
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒரு நபர் மீதும் குற்றப் புகார் எதுவும் கிடையாது. கோவையில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் தொடர்பில்லை' என்று தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இச்செய்தி தனிப் படை போலீஸார் அளித்த தகவலின் பேரிலேயே அளிக்கப் பட்டது. இதில் ‘தி இந்து’ நாளிதழிக்கு எந்த ஒரு உள் நோக்கமும் கிடையாது.