

சென்னை - பெங்களூர் நெடுஞ் சாலையில் ஆங்காங்கே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவ தாகவும், எனினும் சாலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நெடுஞ்சாலையின் தரம் குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக `சட்டக் கதிர்’ இதழின் ஆசிரியரும், வழக்கறிஞருமான வி.ஆர்.எஸ்.சம்பத் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். “சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்துக்கு ஒருமுறை ரூ.40 முதல் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர். வாகனங்கள் தடையேதும் இன்றி எளிதாகப் பயணம் செய்யவும், சாலையில் பிற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பிறகே இதேபோல் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது. ஆகவே, அந்த நெடுஞ்சாலையில் உள்ள பழுதுகள் அனைத்தையும் சரி செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சம்பத் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
மனுதாரர் குறிப்பிடும் நெடுஞ்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய சாலைகள் காங்கிரஸ் (Indian Roads Congress) அமைப்பு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அந்த நிபுணர்கள் குழு சாலையின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்வதுடன், தனது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட வேண்டும். வழக்கின் விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.