

மதுரை: திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை கையகப்படுத்துவதற்கான தடையை நாளை (ஜூன் 19) வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி காஜாமலை எஸ்ஆர்எம் ஹோட்டலின் குத்தகை காலத்தை நீட்டிக்கவும், அதுவரை ஹோட்டலை கையகப்படுத்த தடை விதிக்கவும் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு ஹோட்டலை ஜூன் 18 வரை கையகப்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், சந்தை மதிப்பில் 7 சதவீதம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.1,93,32,669 வாடகை செலுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை உயர்த்தப்பட்டது. அதில் பிரச்சினை ஏற்பட்டதால் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் குத்தகை விதிகள் மீறப்பட்டால் அந்த இடத்தை பயன்படுத்தி வருவோர்களை உடனடியாக வெளியேற்றலாமா? அதற்கு ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அரசுத் தரப்பில், "குத்தகையை நீட்டிக்குமாறு மனு அளித்துவிட்டு, குத்தகை காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல. குத்தகை ஒப்பந்தத்திலேயே, குத்தகை காலம் முடிந்த பின்னர் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை.குத்தகை காலம் முடிந்த பின்னர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எதன் மீதும் உரிமை கோரவோ, இழப்பீடு கோரவோ கூடாது என குத்தகை ஒப்பந்தத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. குத்தகை நீட்டிப்புக்கு 13.5.24 அன்று தான் மனு அளித்துள்ளனர். 29 ஆண்டுகள், 11 மாதங்கள் எந்த மனுவும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, ஹோட்டல் நிர்வாகத்திடம் குத்தகை காலத்தை நீட்டிக்கக்கோரி கடைசி நேரத்தில் ஏன் மனு அளித்தீர்கள், அதற்கு முன்பாக ஏன் மனு அளிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் தரப்பில், 2004-ம் ஆண்டில் குத்தகை காலத்தை நீட்டிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தார். அதுவரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.