

திருப்பூர்: தமிழகத்துல் கோயில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், தமிழக அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைகொள்வதாக தெரியவில்லை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 8 கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல பிரச்சினை. கோயிலை குறிவைத்து நடக்கும் குற்றச் செயல்கள், நாளுக்கு நாள் தமிழகத்துல் அதிகரித்து வருகிறது. திருமண மண்டபங்களில் கூட சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில், நாள்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வழிபடக் கூடிய கோயில்களில் பல லட்சம் மதிப்பிலான விக்ரகங்கள், நகைகள், காணிக்கை உண்டியல் இருக்கும் இடத்தில் கேமரா வைக்க வேண்டாமா?
இது குறித்து காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? கோயில்களில் கோயில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா பொருத்தப்ட வேண்டும், தமிழக காவல்துறை சார்பில் கோயில் பாதுகாப்பு காவலர்கள் என பிரத்யேகமான காவல்படை உருவாக்கப்பட வேண்டும். அதில் திறமையான, இந்து சமய நம்பிக்கை உடைய, சுயநலமில்லாத நபர்கள் சேர்க்கப்பட வேண்டும்.
தகுதியற்றவர்கள் இந்து சமய நம்பிக்கை இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படக் கூடாது. தொடர் கோயில் திருட்டு, கொள்ளையில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிய வேண்டும். சமீபகாலமாக கோயில் கோபுர சிற்பங்கள், பிரகார சன்னதியில் உள்ள விக்ரகங்களை உடைப்பது அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என காவல்துறை வழக்கை முடித்து வைப்பதிலேயே குறியாக இருக்கிறதே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்கறை காட்டுவதில்லை.
இதைப்போலவே உண்டியல் திருட்டும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கும் காவல் துறை நடவடிக்கை எடுத்தபாடில்லை. அறநிலையத் துறையும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல் இது போன்ற தொட்டு சம்பவங்கள் நடைபெறும் போதும் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் அழுத்தம் கொடுத்துப் பழக வேண்டும்.இனியாவது தமிழக அரசும் காவல்துறையும் கோயில் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.