

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆயு்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 20 முதல் 21ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 22ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூன் 23 முதல் 24 வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு, இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.