எங்கும் வண்டு... எதிலும் வண்டு... - உறக்கம் தொலைத்த முத்துநகர், ‘ஆழ்ந்து உறங்கும்’ அதிகாரிகள்!

தூத்துக்குடி ஆசிர்வாத நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் பரவிக் கிடக்கும் வண்டுகள். படங்கள்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடி ஆசிர்வாத நகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் பரவிக் கிடக்கும் வண்டுகள். படங்கள்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தொடரும் இப்பிரச்சினைக்கு முடிவு எப்போது எனத் தெரியவில்லை.

தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

குறிப்பாக மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வண்டுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள ஆசீர்வாத நகர், செல்வ காமாட்சி நகர், பசும்பொன் நகர், இந்திரா நகர், திருவிக நகர், சங்கர் காலனி, தபால் தந்தி காலனி மற்றும் 3-ம் மைல் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தூங்க முடியவில்லை...: இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி 15-வது வார்டு ஆசீர்வாத நகர் கிழக்கு செல்வ காமாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கே.எஸ்.அர்ச்சுணன் கூறும்போது, “ வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன.

இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. இந்திய உணவு கழக குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in