சென்னை மழை: ஓமந்தூரார் மருத்துவமனையில் 80 ஆண்டு பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது

சென்னை மழை: ஓமந்தூரார் மருத்துவமனையில் 80 ஆண்டு பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 17) நள்ளிரவில் பெய்த மழையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த 80 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்தது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று நள்ளிரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த மழைக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்தது.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி பிளாக் நுழைவு வாயில் அருகே இருந்த 20 அடி சுற்றளவு கொண்ட பழமையான ஆலமரம் பலத்த சத்தத்துடன் முறிந்து விழுந்தது. விழுந்த மரத்தின் ஒரு பகுதியானது அருகில் இருக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் மதில் சுவரின் மேலேயும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த விபத்தில் எந்த வித சேதாரமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. தொடர்ந்து அருகில் இருந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விழுந்த மரத்தினால் ஆபத்து ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். பின்னர் இன்று காலை முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், துறை ஊழியர்கள் மூலம் மரத்தை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. மரம் சரியாக நுழைவு வாயில் அருகே விழுந்ததால் அந்த வழித்தடம் மூடப்பட்டு, மாற்று வழியில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in