

ராமேசுவரம்: உலக யோகா தினத்தையொட்டி, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் யோகா மஹோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்திய பண்பாட்டின் விலைமதிக்க முடியாத பரிசு யோகா. இது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கிறது. சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா கோரிக்கை வைத்தபோது, இலங்கைதான் முதன்முதலில் இந்த கோரிக்கைக்கு ஆதரவளித்தது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட பாரம்பரியங்களின் ஒரு பகுதியாக யோகாவும் இருப்பதே இதற்கு காரணமாகும். 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.வில் 47 இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட 177 நாடுகளின் ஆதரவுடன் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது. ஐ.நா. சபை வரலாற்றிலேயே வேறு எந்த கோரிக்கைக்கும் இத்தகைய ஆதரவு கிடைத்தது இல்லை. அதன்படி, முதல் சர்வதேச யோகா தினம் ஜூன் 21,2015-ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக யோகா தினத்தையொட்டி, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, 10 நாள் யோகா மஹோற்சவ விழாவை முன்னெடுத்து நடத்தி வருகிறது. ஜூன் 13-ம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, 22 வரை நடைபெறுகிறது.
இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த யோகா நிகழ்வுகள், அந்நாட்டின் சுற்றுலாவை பிரபலப்படுத்துவதோடு மட்டுமல்லாது, யோகாவின் ஆற்றலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இதுவரை இலங்கையின் சிகிரியா, யாழ்ப்பாணம், நெடுந்தீவு, மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு டவுன்ஹால், தேசிய அருங்காட்சியகம், திரு கோணமலை மெக் ஹெய்சர் மைதானம், தெவுந்தர கலங்கரை விளக்கம், கண்டி, நுவரெலியா, அம்பாறை போன்ற இடங்களில் யோகா ஆர்வலர்கள் குழு, பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இலங்கை, திருகோணமலை மெக் ஹெய்சர் மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்