

தமிழகத்தில் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்களை குறிவைத்தே சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது தேர்தல் துறையினர் தரும் புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே முதல்முறை வாக்காளர்களுக்கு இம்முறை மவுசு அதிகமாக இருந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், புதிதாக சேர்க்கப் பட்டுள்ள முதல்முறை வாக்காளர்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றெண்ணி சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் துறையும், இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய விளம்பரங்களை வெளியிட்டு அசத்தியது.
இளைஞர்களைக் கவர
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்கியதற்கும், முதல்வர் ஜெயல லிதா பெயரில் ஏராளமானோருக்கு இ-மெயில் தகவல்களை அதிமுக தரப்பில் அனுப்பப்பட்டதும் இளம் தலைமுறையினரைக் கவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே ஆகும்.
தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூட நாட்டின் நலன் கருதி இளம் தலைமுறையினர் அதிமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 15.08 லட்சம் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.51 கோடி. அதில் 15.08 லட்சம் பேர் என்பது மூன்று (2.72%) சதவீதத்துக்கும் குறைவே.
இந்த சிறு துளியால் பெரும் மாற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேசமயத்தில், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 1.10 கோடியாகும். இதில், முதல்முறை வாக்காளர்கள் சில லட்சம் அளவில் இருப்பார்கள்.
21 சதவீதம் பேர்
தமிழகத்தில் 30 முதல் 39 வயது வரை உள்ள 1.36 கோடி வாக்காளர்களே (21%) தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் குறிப்பிட்டத்தக்க பங்கினை வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.