Last Updated : 16 Jun, 2024 05:25 PM

1  

Published : 16 Jun 2024 05:25 PM
Last Updated : 16 Jun 2024 05:25 PM

‘‘சுதந்திர போராட்ட தியாகிகளை சாதி தலைவர்களாக சித்தரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்’’ - ஆளுநர் ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இன்றைய காலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் சாதி தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனம் எனப்படும் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனத்தின் நினைவு நாள் மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 89 புத்தகங்களை எழுதிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது.

ஆளுநரின் தனி செயலாளர் கிர்லோஷ்குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார், பாஞ்சாலங்குறிச்சி போர் என்ற புத்தகத்தின் ஆசிரியர் செந்தில்குமார், பத்திரிகையாளர் கோலப்பன், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

'சுதந்திர போரில் வக்கீல்களின் பங்கு' என்ற தலைப்பில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் தொகுத்த புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, அதன் முதல் பிரதியை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு 89 புத்தகங்களை எழுதிய சென்னை அண்ணா பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர்களுக்கும் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி ஆளுநர் பாராட்டினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஏராளமானோர் ரத்தம் சிந்தி உள்ளனர். அவர்களில் பலர் அறியப்படாமல் உள்ளனர். தமிழகத்தில் அவ்வாறு அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியை நான் ஆளுநராக பொறுப்பேற்றதும் மேற்கொண்டேன்.

அதன்விளைவாக இன்றைய தினம் ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு போன்றவை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை அனுபவித்து வருகிறோம். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும்.

அவர்களை ஒருபோதும் நாம் மறந்து விடக்கூடாது. இன்னும் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தால் அவர்களது தியாகத்தையும் வெளிக்கொண்டு வர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் சாதி தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இது, தவிர்க்கப்பட வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்கள், உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவது மட்டுமே அவர்களை கவுரப்படுத்தும் செயல் என கருதக்கூடாது. மாறாக சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x