Published : 03 May 2018 07:44 AM
Last Updated : 03 May 2018 07:44 AM

கோவை குட்கா ஆலை உரிமையாளரை கைது செய்ய முடியாமல் டெல்லியில் தனிப்படை போலீஸ் தவிப்பு; எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது

கோவை குட்கா ஆலை விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இதுதொடர்பாக, எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆலை உரிமையாளரை பிடிக்க முடியாமல் டெல்லியில் தனிப்படை போலீஸார் தவித்து வருவதாக தெரியவருகிறது.

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த சட்ட விரோத குட்கா ஆலை குறித்து ரகசிய தகவல் அறிந்த தனிப்படை போலீஸார், அங்கு அதிரடி சோதனை நடத்தி 648 கிலோ குட்கா உட்பட சுமார் 26 டன் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலாளர் ரகுராமன், ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தகவல்

இதனிடையே, கட்டிட அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி ஏதுமில்லாத நிலையில், வரிகளை மட்டும் வசூலித்து அந்த ஆலை இயங்குவதற்கு திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன் உதவியுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம், அங்கு வழக்கமான ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளனர். அதேபோல, குட்கா தயாரிப்பினால் ஏற்படும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பேரூராட்சி நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆலையில் ஆய்வு நடத்தியுள்ளன. அதிலும் எந்த முறைகேடுகளும் இல்லை என்றே கூறப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அரசு துறைகளில் விசாரணை

இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினர் எந்த அடிப்படையில் உரிமம் வழங்கினர், ஆய்வு செய்தனர் என்பது குறித்து விசாரிக்கப்பட உள்ளது. அதேபோல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் பல வழிகளில் அந்த ஆலைக்கு உதவியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர்.

இந்நிலையில், ‘குட்கா ஆலை விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி நடத்திய போராட்டத்துக்காக 3 நாட்கள் கழித்து எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் கோவையில் நாளை (மே 4) போராட்டம் நடைபெறும்’ என்று திமுகவினர் தெரிவித்தனர்.

இதனிடையே, போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து கோவை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் வந்தவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 312 திமுகவினர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தனிப்படை திணறல்

குட்கா ஆலை உரிமையாளர் அமித்ஜெயினை(38) பிடிக்க ஒரு ஆய்வாளர் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை டெல்லி சென்றுள்ளது. ஆனால், அமித்ஜெயினின் முகவரி கூட தெரியாமல் தனிப்படை போலீஸார் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ‘டெல்லி பிதம்புரா என்பது பெரிய பகுதி. எங்களிடம் உள்ள முகவரி தகவலை வைத்து கண்டுபிடிப்பது கடினம் என டெல்லி போலீஸார் கூறி விட்டனர். தமிழகத்தில் இருந்து தொழில்நுட்ப உதவி கேட்டுள்ளோம். அமித்ஜெயினை விரைவில் பிடித்துவிடுவோம்’ என்று டெல்லி சென்றுள்ள தனிப்படை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குட்கா ஆலையில் ரெய்டு நடத்தப்பட்டபோது, அங்கு போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தலைமறைவாக உள்ள திமுக எம்எல்ஏ கார்த்திக் தரப்பில் முன்ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கைதானவர்களும் தங்கள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று, கைது செய்யப்பட்ட 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் சூலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x