Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM

பேருந்தே எட்டிப் பார்க்காத கிராமங்கள்: நாங்கள் படும் அவதி தீருவது எப்போது?

சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் சென்றபின்னரும் கூட அரசுப்பேருந்து எட்டிப்பார்க்காத கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாகை மாவட்டம் கொள்ளிடத்துக்கு அருகே அப்படி பேருந்து முகத்தைப் பார்க்காத கிராம மக்களிடமிருந்து பேருந்து வசதி கேட்டு ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கு வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் விடுத்திருந்த கோரிக்கையின் விவரம்:

சீர்காழி- சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள புத்தூரிலிருந்து மேற்காக மாதிரவேளுர் வரையிலும் ஆனந்தகூத்தன், சோதியக்குடி, கீரங்குடி, சிதம்பரநாதபுரம், கொன்னக்காட்டுப்படுகை ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றில் மொத்தமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் பிள்ளைகள் உயர் கல்விக்காக சீர்காழி, சிதம்பரம், புத்தூர் ஆகிய ஊர்களுக்குத்தான் செல்ல வேண்டும். அப்படி நாளொன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சென்று படிக்கிறார்கள். அதேபோல தினமும் கட்டிட வேலை, அலுவலகப்பணி ஆகியவற்றுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளியூர் செல்கிறார்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என்று எல்லா வேலைகளுக்கும் கொள்ளிடம், சீர்காழிக்கு சென்றாக வேண்டும்.

இப்படி ஊருக்கு வெளியே கிளம்பும் அத்தனை பேரும் பேருந்து வசதி இல்லாததால் அவதியுறுகிறார்கள். அந்தவழியாக செல்லும் இருசக்கர வாகனம், டிராக்டர்கள் என்று எதிலாவது இடம் கேட்டு ஏறித்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பகலில் வெளியூர் செல்ல இப்படி என்றால் இரவு நேரத்தில் ஒரு அவசர ஆபத்துக்கு நகரத்துக்கு வருவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

ஏதாவது ஆபத்து, அவசரம் என்றால் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் புத்தூரிலிருந்துதான் ஆட்டோ வரவழைக்க வேண்டியிருக்கும். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் என்றால் ஆட்டோ ஒட்டிகள் மனது வைத்தால் மட்டும்தான் வரும். வெளியூர் சென்று ஊர் திரும்பும் போது சில நேரங்களில் புத்தூரில் ஆட்டோ இல்லாமல் விடிய விடிய பெண்கள், குழந்தைகளோடு காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது என்றார் ‘உங்கள் குரல்’ பகுதியில் தனது கோரிக்கையைப் பதிவு செய்த வாசகர்.

இந்த வருத்தத்தைப் போக்க 5 ஆண்டுகளுக்கு முன் வாராது வந்த மாமணியாய் ஒரு சிற்றுந்து இந்த பாதையில் இயங்கத் தொடங்கியது. ஆனந்தமாய் அதில் மக்கள் பயணப்பட்டார்கள். ஆனால், சில வருடங்களில் அப்பேருந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. அதனால் பழையபடியே நடையாய் நடந்தும், இருசக்கர வாகனங்களை நம்பியபடியும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றிட அரசுப் போக்குவரத்துக் கழகம் மனதுவைக்க வேண்டும் என்று மனதுக்குள் மருவும் மக்கள் அரசுப் போக்குவரத்துக் கழக சீர்காழி கிளை மேலாளர், ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு தங்கள் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசியபோது, “மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டே சீர்காழி கிளையில் இருந்து அந்த வழியாக பேருந்து இயக்கிட கருத்துரு தயாரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆய்வுக்காக அதிகாரிகளும் வந்தார்கள். தற்போது குறிப்பிடப்படும் அந்த பாதை மிக குறுகலானது. அதிலும் இரண்டு இடங்களில் உள்ள திருப்பங்களில் நிச்சயமாக பேருந்து செல்லமுடியாது என்பது ஆய்வில் தெரிய வந்தது. அதனால் தான் அப்பகுதிக்கு பேருந்து இயக்க முடியவில்லை. சாலை வசதி செய்து தரப்பட்டால் பேருந்து இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றனர்.

சாலை, மின்சாரம்போல போக்குவரத்தும் அத்தியாவசியமானது தான் என்பதை மனதில் கொண்டு அதிகாரிகள் சீர்காழியிலிருந்து மாதிரவேளூருக்கு சோதியக்குடி, கீரங்குடி வழியாக அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறுகலான சாலையை விரிவுபடுத்தித் தர சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு என்கின்றனர் மக்கள். ஆவண செய்து மக்கள் அவதிப்படுவதைத் தீர்க்க முன்வருவார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x