Published : 15 Jun 2024 09:28 AM
Last Updated : 15 Jun 2024 09:28 AM
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், பொதுமக்கள் அறிந்துகொள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாக சட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்தார்.
அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல்அளித்துள்ளதால், தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இச்சட்டப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தமாநில அளவில் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, நிதி, வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசால் நியமிக்கப்படும் 5 சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், தலைமைச்செயலர், நிதி,திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை, வனத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர் களாக இருப்பர்.
இக்குழு ஆண்டுக்கு ஒருமுறை கூடி, மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான கொள்கைகள் மீது அரசுக்கு ஆலோசனை வழங்கும். அத்துடன், அதிகாரமளித்தல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மேம் பாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்.
இக்குழுவின் கீழ், அதிகாரமளித்தல் குழுவானது, ஆதிதிராவிடர், நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்படும். இக்குழுவில் தலைமைச்செயலர் உள்ளிட்டதுறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அதிகாரமளித்தல் குழு ஆண்டுக்கு 3 முறை கூடும்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கான மேம்பாட்டு செயல் திட்டங்களை உருவாக்குவது, தரவுகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, மேம்பாட்டு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தும் முகமைத்துறையாக இருக்கும். மேம்பாட்டுசெயல் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கும். இதுதவிர, மாவட்ட அளவில் திட்டங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவும் உருவாக்கப்படும்.
ஆட்சியர் தவிர்த்து, ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 5-க்கும் மிகாத சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வனஅலுவலர், வேளாண் இணை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து, முன்னேற்ற அறிக்கை அளிக்கும்.
இச்சட்டப்படி ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மட்டுமே பயனளிக்கும் சிறப்பு திட்டங்களுக்கான தொகையின் 100 சதவீதத்தையும் அத்திட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின்படிவகுக்கப்படும் விதி அல்லது அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்படும் உத்தரவு என ஒவ்வொன்றும் அதுவகுக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பின், அடுத்து கூடும் பேரவை கூட்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT