தமிழகத்தில் ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை 

தமிழகத்தில் ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை 
Updated on
1 min read

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பதிவு காரணமாக, விடுமுறை நாட்களில் நியாயவிலைக்கடைகள் இயங்கியதற்காக, நாளை ஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதிகளில் நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நியாயவிலைக்கடைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆதார் அடிப்படையில் பதிவு நடைபெற்றதால், நியாயவிலைக்கடைகளில் இருந்த விரல்ரேகை பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

இதுதவிர, சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நேரத்தில், நியாயவிலைக் கடைகளுக்கான விடுமுறை தினங்களான, கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 4ம் தேதி ஆகிய இரு தினங்கள், நியாயவிலைக்கடைகள் இயங்கின. அப்போதே, இதற்கு பதில் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அந்த இரண்டு நாட்களுக்குப்பதிலாக, நாளை ஜூன் 15ம் தேதி மற்றும் வரும் ஜூலை 20ம் தேதி ஆகிய இரு சனிக்கிழமைகளும் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in