பாபநாசம்: வீடு கட்டுவதற்கு தோண்டிய அஸ்திவார குழியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

பாபநாசம்: பாபநாசம் அருகே வீடு கட்டுவதற்கு தோண்டிய அஸ்திவார குழியில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் தான் சிலைகள் குறித்த முழு விவரமும் தெரியும் என வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை அருகில் உள்ள கோயில் தேவராயன்பேட்டையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மச்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகில் முகமது பைசல் (43) என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக கட்டிடப் பணியாளர்கள் இன்று (வெள்ளி கிழமை) காலையில் அஸ்திவாரம் தோண்டினர்.

அப்போது, சுமார் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட அஸ்திவார குழியில் இருந்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பரபரப்படைந்த கட்டிடப் பணியாளர்கள் இடத்தின் உரிமையாளர் முகமது பைசலிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து பைசல் உடனடியாக பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் மணிகண்டன், அந்த இடத்தில் மேலும் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளனவா என போலீஸார் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேசமயம், அஸ்திவார குழியில் கிடைத்த சிலைகள் மீது களி மண் மேவி இருப்பதால் சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் தான் சிலைகள் குறித்த முழு விவரமும் தெரியும் என வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in