Published : 14 Jun 2024 06:17 AM
Last Updated : 14 Jun 2024 06:17 AM
சென்னை: பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா தான் இசையமைத்த 4,500 பாடல்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்ட பிறகுஅதற்கு தார்மீக உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமைஉள்ளது எனக்கூறி, எக்கோ இசை நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, தான் இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு தார்மீக உரிமை கோர முடியாது.
சம்பளம் கொடுத்து திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைப்பதற்கான சேவையைப் பெறும்தயாரிப்பாளர்தான் அப்பாடலின் பதிப்புரிமைக்கான முதல் உரிமையாளர். அந்த பதிப்புரிமையின்படி படத் தயாரிப்பாளர்களிடம் முறையாக ஒப்பந்தம் செய்து இளையராஜா இசையமைத்துள்ள 4,500பாடல்களை எக்கோ நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதுதொடர்பாக இளையராஜாவுடன் நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் மதிப்பின் காரணமாக கடந்த 1990-ம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கப்பட்டது. அதன்பிறகு நிறுத்தப்பட்டது. அதற்காக எங்கள் நிறுவனம் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டுமே அதற்கான தார்மீக உரிமை குறித்த கேள்வி எழும். சமீபத்தில் குணா படத்துக்கான பாடல் திரிக்கப்பட்டுள்ளதாக மஞ்சுமெல் பாய்ஸ்படத் தயாரிப்பாளருக்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவர் வாதிட்டார்.
மேலும் வாதிட்ட விஜய் நாராயண், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா தனது பதிப்புரிமையை படத் தயாரிப்பாளரிடம் வழங்கி விட்டார்.கடந்த 1970 முதல் 1990 வரையிலானகாலகட்டத்தில் தான் இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமை தன்னிடமே இருக்கும் என அவர் தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு அவர் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இந்த பாடல்களுக்கு இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என்றார்.
இந்த வழக்கில் எக்கோ தரப்பில் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...