Published : 01 May 2018 10:32 AM
Last Updated : 01 May 2018 10:32 AM

சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி நேற்று சந்தித்துப் பேசினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்த சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மாநில சுயாட்சி

பின்னர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, தேசிய அளவில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பது, மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட சந்திரசேகர ராவ், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினார்.

இந்நிலையில், நேற்று பகல் 12 மணி அளவில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, கிண்டி நட்சத்திர ஹோட்டலில் சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தெலங்கானா மாநில நிதி அமைச்சர் ராஜேந்தர், எம்.பி. கேசவ ராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ‘‘மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் என்ற முறையில் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். பொதுவான அரசியல் நிலவரம், நாட்டில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். இந்த சந்திப்பில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை. சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பின்போது நடந்த விவரங்களை அவர்கள் இருவரும் தெளிவாக கூறியுள்ளனர். எனவே, அதுபற்றி கூற எதுவும் இல்லை’’ என்றார்.

கருணாநிதி, ஸ்டாலினை சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் சந்தித்தபோது கனிமொழி உடன் இல்லை. இந்நிலையில், சந்திரசேகர ராவை கனிமொழி நேற்று தனியாக சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x