

தாம்பரம்: தாம்பரம் தீயணைப்புத் துறையில் வயது மூப்பின் காரணமாக இறந்த மோப்ப நாய் ஜீனாவின் உடல் பேண்டு வாத்தியங்கள் முழங்க இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தாம்பரத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மாநில பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோப்ப நாய் இடர் மீட்பு அணியும் செயல்பட்டு வருகிறது. இதில் ஜீனா என்ற பெண் மோப்ப நாய் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்தது. வயது மூப்பால் ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜீனா சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் இயற்கை எய்தியது. உயிரிழந்த ஜீனாவின் உடல், அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்குப் பின் தாம்பரம் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டது.
பயிற்சி மைய மாவட்ட அலுவலர் தென்னரசு தலைமையில் ஜீனாவுக்கு தீயணைப்புத் துறையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க அரசு மரியாதையுடன் பயிற்சி மையத்திலேயே ஜீனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்குள்ள ஆண் நாய்களான பாக்சர், கோல்டி, சேம்பு, பெண் நாய் பிரிஸ்கி ஆகியவையும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று ஜீனாவுக்கு அஞ்சலி செலுத்தின.
மோப்ப நாய் ஜீனாவின் இழப்பு தீயணைப்பு துறையினா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோப்ப நாய் ஜீனா சுங்குவார் சத்திரம், பாலூர், தரமணி, திருவல்லிக்கேணி, ரெட்ஹில்ஸ், மாமல்லபுரம்,மெளலிவாக்கம் போன்ற இடங்களில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளில் பணியாற்றியது. மௌலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்த விபத்தில் இடர்பாடுகளில் பணியாற்றியமைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது இந்த ஜீனா என்பது குறிப்பிடத்தக்கது.