

சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திமுக தலைமையுடன் தொடர்புகொள்ளவும், தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகளை கட்சித்தலைமை சார்பில் கவனிக்கவும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது.
தேர்தல் பணிக்குழுவில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.லட்சுமணன் ஆகியோர் தொகுதிக்கான ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 14-ம் தேதி மாலை விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறஉள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில், தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.