Published : 13 Jun 2024 05:50 AM
Last Updated : 13 Jun 2024 05:50 AM
மதுரை: உலக அளவில் 4 சதவீதம் பேரை மட்டுமே தாக்க வாய்ப்புள்ள ‘நோடோபதி’ நரம்பு நோய் பாதித்த கர்ப்பிணியை, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.15 லட்சம் மருந்து வழங்கி அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 28 வயதான, 8 மாத கர்ப்பிணி ஒருவர் கை, கால்கள் செயல் இழந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த நரம்பியல் பிரிவு மருத்துவர்கள், ‘நோடோபதி’ என்ற அபூர்வ நோய் அவரைத் தாக்கியதைக் கண்டறிந்தனர். அவருக்கு விலை உயர்ந்த ‘ரிட்டுக்ஸிமாப்’ என்ற மருந்து செலுத்தினால் மட்டும் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த மருந்தை நோயாளிக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு, 3 வாரங்கள், 3 ஊசிகள் போட வேண்டும். இதற்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும். இந்த தொகையை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் பெற்ற மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தி காப்பாற்றினர். தற்போது அந்தப்பெண்ணுக்கு பிரசவம் நடந்து,தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் தர்மராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்ப்பிணி 3 முறை கை, கால்கள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும், நரம்பியல் பிரிவு மருத்துவர்கள், என்சிஎஸ் என்ற நரம்பு மண்டல சிறப்பு பரிசோதனை செய்து குணப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
கடைசியாக 3-வது முறையாக கை, கால்கள் தீவிரமாக செயலிழந்த நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை பரிசோதனை செய்தபோதுதான், அவருக்கு அபூர்வமான நோடோபதி நோய் கண்டறியப்பட்டது.
இந்த நோய் பாதிப்பு உலகமக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்குதான் வர வாய்ப்புள்ளது. அதனால், இதற்கான மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தால் மருந்துபெற்று, நோயாளிக்கு செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரம்பியல் பிரிவு துறைத் தலைவர் முருகன், பேராசிரியர்கள் ஜஸ்டின், இளங்கோவன், உதவிப்பேராசிரியர் செழியன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT