Published : 13 Jun 2024 08:17 AM
Last Updated : 13 Jun 2024 08:17 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பயண செலவில் விலக்கு பெற கட்சிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 77-ன்படி, தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களின் விமான பயணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் வேட்பாளர், முகவர்களின் கணக்கில் சேராது. தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற விரும்பும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்பவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

இதுதவிர, மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை வரும் 14-ம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. மேற்கண்ட சட்டப் பிரிவு விளக்கம் 2(1)-ன்படி, அறிவிக்கை வெளியிட்டதில் இருந்து 7 நாட்களுக்குள் இப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், கட்சிகள் ஜூன் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x