Published : 13 Jun 2024 08:55 AM
Last Updated : 13 Jun 2024 08:55 AM
சென்னை: தமிழக காவல் துறையில் 1994-ம் ஆண்டு போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் அடிமைத்தனத்தில் இருந்து தமிழ்நாடு காவல் துறையை மீட்டெடுக்க வேண்டும், போலீஸார் கொந்தளிப்பில் உள்ளதாக அரசுக்கு மொட்டை கடிதம் எழுதியதாக கடந்த 1999-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. அதனடிப்படையில் 2001-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, அவரது பணி நீக்கத்தை உறுதி செய்து உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ஞானசேகரன், மனுதாரர் பணியில் உள்ள போலீஸாருக்கு ஆதரவாக அரசுக்கு மொட்டைக் கடிதம் எழுதினார் என்ற குற்றச்சாட்டுக்காக அவரை பணி நீக்கம் செய்வது அதிகபட்ச தண்டனை. எனவே அவருடைய பணி நீக்கத்தை ரத்து செய்து வேலை வழங்க வேண்டும், என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், சகபோலீஸார் எழுதச் சொன்னதால் தான் அவ்வாறு கடிதம் எழுதியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அவரை பணி நீக்கம் செய்திருப்பது என்பது கடுமையான தண்டனையாக கருதுகிறோம். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 6 வாரத்துக்குள் வேலை வழங்க வேண்டும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அவர் ஊதியம் கோர முடியாது. இந்த காலகட்டத்தை அவருடைய ஓய்வூதியத்துக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும், என உத்தரவி்ட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT