நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு

எம்.ஆர். விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
எம்.ஆர். விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

கரூர்: நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர் வந்திருந்தனர். மேற்படி சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.

அதன்பிறகு, அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் நேரில் என்னிடம் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று கடந்த மே 10-ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனு அளித்தார்.

கரூர் மாவட்ட பதிவாளருக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரிடம் இருந்து வரப்பெற்ற கருத்துரு தகவல் படி, வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்கவில்லை. எனவே பத்திரப் பதிவுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் போலியானது உண்மை தன்மையற்றது என்பது உறுதியானது. எனவே கூட்டு சதி செய்து, சொத்தை அபகரித்து பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோது யுவராஜ், பிரவீன் ஆகியோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்" என கூறியிருந்தார்.

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தானும் கைது செய்யப்படலாம் என நினைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு இன்று (ஜூன் 12ம் தேதி) மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in