

புதுச்சேரி: ஹைட்ரஜன் சல்பைட் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதிகளில் துர்நாற்றம் பரவலாக இருப்பதாகக் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். புகாரை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் புதுநகரில் ஹைட்ரஜன் சல்பைட் விஷவாயுவால் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மூன்று தெருக்களில் இருந்தோரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்காக தற்காலிகமாக கழிவறையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் பல வீடுகள் மூடி இருந்தன. பலரும் தெருக்களிலும் கோயில் வாசலிலும் அமர்ந்திருந்தனர்.
மூன்று தெருக்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இன்றும் காலை வருவாய்துறை மூலம் உணவு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பொதுமக்கள் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீர் கருப்பாக வருவதாகவும் குறிப்பிட்டனர். கழிவுநீர் குழாய்களை அரசு மாற்றி தர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இந்நிலையில் விஷவாயு தாக்கி இறந்த தாய், மகள் வீடு, அருகேயுள்ள இறந்த சிறுமியின் வீடுகளின் வாயிலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. உறவினர்களும் குழுமியிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலைக்குள் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிட்டனர்.
விஷவாயுவால் பாதிக்கப்பட்ட புதுநகர் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை: இந்த நிலையில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டன. புதுநகர் 6-வது தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாணவர்களும் வந்திருந்தனர். ஆனால் கல்வித்துறையிலிருந்து வந்த தகவலை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான இமாகுலேட் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
விஷவாயுவால் பாதிக்கப்பட்ட புதுநகர் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் அங்குள்ள கோவில் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகளில் மைக் மூலமாக அறிவிப்பு வெளியிட்டபடி சென்றனர். யாருக்கேனும் தலைவலி, வாந்தி, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவ முகாமிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதோடு அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.