ஏனாம் அரசு மருத்துவமனை அவலம்: பிரேத கிடங்கு ப்ரீசர் பழுதால் நோயாளி அறையில் வைக்கப்பட்ட சிறுவன் உடல்

போராட்டம் நடத்தும் சிறுவனின் உறவினர்கள்
போராட்டம் நடத்தும் சிறுவனின் உறவினர்கள்
Updated on
1 min read

புதுச்சேரி: ஏனாம் அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் ப்ரீசர் பழுதால் 14 வயது சிறுவனின் உடலை நோயாளி அறையில் படுக்கையில் பல மணி நேரம் வைத்திருந்ததால் போராட்டம் நடந்தது.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில காக்கிநாடா அருகில் உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத அறையின் ப்ரீசர் பழுதாகி பல மாதங்களாகிறது. இதனால் நோயாளிகள் இறந்ததால் அவர்களது உடலை பாதுகாத்து வைக்க வசதியில்லை.இதனால் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தான் எடுத்து செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்குள்ள கிரியாம்பேட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி நேற்று இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான். சிறுவன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த பிறகு உடலை பாதுகாத்து வைக்க பிரேத அறையில் ப்ரீசர் வேலை செய்யாததால் நோயாளிகள் அறையின் படுக்கையில் பல மணி நேரம் வைத்திருந்தனர்.

இதனை கண்டித்து உறவினர்களும் அப்பகுதி மக்களும் அரசு மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு ஆண்டுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் பிரீசர் வேலை செய்யவில்லை. இதனை சீரமைக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அடிக்கடி சடலங்கள் அழுகும் நிலை உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதனிடையே ஏனாம் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது துணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார், ஒரு மாதத்துக்குள் பிரேத அறையில் ஃப்ரீசர் சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் சடலத்தைப் பெற்று அடக்கம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in