Published : 12 Jun 2024 05:06 AM
Last Updated : 12 Jun 2024 05:06 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ளகட்டண படுக்கை வார்டுகளில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழக அரசின்அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2021 மற்றும் 2022 செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2025-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையிலும், ஓய்வூதியர்களுக்கு வரும் 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல்2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிவரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற ரூ.5 லட்சம், சில குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்கிறது.
புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவக் காப்பீடு திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும். அரசுமருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும் எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சையை உடனடியாக தொடங்கி, பின்னர் 48 மணி நேரத்துக்குள் முன் அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக 203 நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கட்டண படுக்கை பிரிவுகளில் இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்பன போன்ற வசதிகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT