Published : 12 Jun 2024 05:50 AM
Last Updated : 12 Jun 2024 05:50 AM

திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டு கொடுக்காது: நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உறுதி

சென்னை: திமுக தனது கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

மக்களவை பொதுத்தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40இடங்களையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. இதில் திமுக போட்டியிட்ட 22 இடங்களிலும் வெற்றி பெற்று, மக்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் 5-வது பெரிய கட்சியாக திமுக மாறியுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற திமுக குழு தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் முதல்வர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக கனிமொழியும், மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மக்களவை குழுதுணைத் தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலங்களவை குழுத்தலைவராக திருச்சி சிவாவும்,மாநிலங்களவை குழு துணைத்தலைவராக மு.சண்முகம், மாநிலங்களவை கொறடாவாக பி.வில்சன், இரு அவைகளின் பொருளாளராக எஸ்.ஜெகத்ரட்சகனும் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதையடுத்து, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்னை இந்த பொறுப்புக்கு தேர்வு செய்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தன்னுடைய கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. 10 ஆண்டு காலமாக பாஜகவுடைய எத்தனையோ மசோதாக்களை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். சிறுபான்மை மக்களை, இந்த நாட்டை,இந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை, சமூக நீதியை காக்கக்கூடிய வகையிலேயே திமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். இதுதான் முதல்வர் எங்களுக்கு சொல்லியிருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது நீட் தேர்வால் குழப்பங்கள், அதனால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்கூடாக நாடு முழுவதும் பார்த்துபுரிந்து கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக திமுக செயல்படும். கல்விக்கடன் ரத்தையும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆட்சி பொறுப்புக்கு வேறொருவர் வந்துவிட்டால் மாற்றங்கள் வராது என்பது நிச்சயமல்ல. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x