

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் யோகா, இயற்கை மருத்துவ பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை சார்பில் டெல்லி, தமிழகத்தில் தேசிய நல மருத்துவ மையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி திறக்கப்பட்டது.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் வழிகாட்டுதலின்படி, 8.64 ஏக்கரில் 3.76 லட்சம் சதுர அடி பரப்பளவில் நாட்டிலேயே முதல் முறையாக முதியோருக்காக பிரத்யேகமாக கிண்டியில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் 200 படுக்கைகள், 40 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 20 கட்டண படுக்கைகள் உள்ளன. ஏழைகளும் பயன்படுத்த ஏதுவாக, உணவு வசதியுடன் ஒரு அறைக்கு ரூ.900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை புறநோயாளிகளாக 37,811 பேர், உள்நோயாளிகளாக 1,198 பேர், தீவிர சிகிச்சை பிரிவில் 985 பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 220 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இங்கு ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இந்த வளாகத்தில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. முதியோர்கள் மகிழ்ச்சியாக விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தரப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது யோகா, இயற்கை மருத்துவ பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதில் பக்கவிளைவுகள் இல்லாத உபவாச கிசிச்சை, யோகா, மசாஜ், நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, மூலிகை, அக்குபஞ்சர், அக்குபிரஷர் மற்றும் காந்தம், நீர், நிறம், நறுமண சிகிச்சைகள் என பலவிதமான இயற்கை மருத்துவ சிகிச்சைகள், மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. உடலையும், உள் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், முதுமையில் காணப்படும் கோபம், அச்சம் ஆகியவை அதிகரிக்காமல், அமைதியான மனநிலையில் இருக்கவும் முதியவர்களுக்கு இந்த சிகிச்சைகள் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குநர் தீபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.