

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று கடைக்குள் புகுந்து அரசுப் பேருந்து விபத்திற்குள்ளானதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என கூறி, அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல நிர்வாகம் ஓட்டுநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசுப் போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் இருந்து பெரியகுளம் - கரூர் இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து நேற்று திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் இருந்து வெளியே வரும்போது எதிரே உள்ள கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.
இந்தப் பேருந்து நேற்று பெரியகுளத்திலிருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு கரூர் சென்று, கரூரிலிருந்து திண்டுக்கல் வரை சுமார் 210 கி.மீ எந்தவித இயந்திர கோளாறு தொடர்பான புகாரின்றி இயக்கப்பட்டுள்ளது. மீண்டும் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி வழித்தடத்தில் பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, அப்பேருந்தின் ஓட்டுநர் விதிமுறைகளை பின்பற்றாமல் வேகமாக இயக்கி, இடது புறம் திரும்புவதற்கு பதிலாக நேராக பேருந்தை இயக்கி கடைக்குள் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், இப்பேருந்து இதற்கு முந்தைய நாட்களில் பராமரிப்பு குறைபாடு ஏதுமின்றி முழுமையாக இயக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பேருந்தின் விபத்தானது ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது என்பதனையும், அப்பேருந்தில் எந்தவித இயந்திர கோளாறும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விபத்திற்கு காரணமான ஓட்டுநர் பழனிச்சாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.