Last Updated : 11 Jun, 2024 07:37 PM

 

Published : 11 Jun 2024 07:37 PM
Last Updated : 11 Jun 2024 07:37 PM

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி தொடருமா? - மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப் படம்

மதுரை: ஆதிச்சநல்லூரில் அகழாய்வை தொடர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராஜர் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆதிச்சநல்லூரில் 125.04 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழி உள்ளிட்ட அகழாய்வு பொருட்கள் கிமு 1052 முதல் 665 ஆண்டுக்கு உட்பட்டவை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழர்களின் பண்பாட்டு பழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்களின் தன்மை மற்றும் அதன் பழமையின் அடிப்படையில் அகழாய்வு நிலம் ஏ,பி,சி என வகைப்படுத்தப்பட்டது. பி பிரிவு பகுதியில் ஆன்சைட் அகழாய்வு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு 2023 ஆகஸ்ட் 5-ல் திறக்கப்பட்டது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டது.

இதனால் சி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை கிடப்பில் உள்ளது. இந்தியாவின் முதல் ஆன்சைட் அகழாய்வு அருங்காட்சியகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அதை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆதிச்சநல்லூர் ஆன் சைட் அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், “பி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. நிலம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். மேலும், தற்காலிக அருங்காட்சியகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பண்டைய தமிழர்களின், நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்துவது ஏன்? அரசுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் இருக்குமே, அந்த நிலங்களை வழங்கலாமே? ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க தகுதியான நிலம் இருந்தால் அது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை மேலும் தொடர்வது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தற்காலிக அருங்காட்சியகம் சேதம் அடைந்திருந்தால் அதை புனரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x