Published : 11 Jun 2024 06:13 AM
Last Updated : 11 Jun 2024 06:13 AM

கிராம சுகாதார பணியாளர்கள் 2,500 பேர் விரைவில் நியமனம்: சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி

சென்னை: தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் ஆகிய சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணைஆணையர் (கல்வி) ஷரண்யாஅறி, மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், மோகன்குமார், சுப்பிரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம்(எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் இணையாத 193 மருத்துவர்களுக்கான பணிநியமன ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு, ஏற்கெனவே எம்ஆர்பி-யில் தேர்வாகி மூப்பு அடிப்படையில் இருப்பவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிநியமன ஆணை இன்னும் 10 நாட்களில் கொடுக்கப்படும்.

அதேபோல், 2,553 புதிய மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 983 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளது. கரோனா காலங்களில் பணிபுரிந்ததற்காக தங்களுக்கும் ஊக்க மதிப்பெண்கள் வேண்டும் என்று கேட்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கும் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.இன்னும் 15 நாட்களில் மருந்தாளுநர் பணியிடங்களுக்கு முறையாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.

மாநில அரசுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x