Published : 11 Jun 2024 05:50 AM
Last Updated : 11 Jun 2024 05:50 AM

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா கொண்டுவர ஏற்பாடு

தஞ்சாவூர்: இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருமங்கை ஆழ்வாரின் ஐம்பொன் சிலையை இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவில் கிராமத்தில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் இருந்த 15-ம்நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் சிலைக்கு பதிலாக போலியான சிலை வைக்கப்பட்டு இருந்தது, புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர், 2020-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட சிலை எங்கு உள்ளது என விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், அந்த சிலை இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிலை தமிழகத்தைச் சேர்ந்தது தான் என்பதற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆர்வலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் அருங்காட்சியக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் கேட்டுக் கொண்டது. அதன்படி, அந்த சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது அந்த சிலையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தொல்பொருள் ஆர்வலர் விஜயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இங்கிலாந்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளில் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. அதை விரைவில் இங்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை, விஷ்ணு சிலை, தேவி சிலை ஆகியவை வேறு சிலநாடுகளில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x