

திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெயரிலான விளையாட்டு அகாடமி பேனர்கள் வைத்த விவகாரத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான 96-வது சீனியர் தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் ஜூன் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அதிமுகமுன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நடத்தி வரும் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சாம்பியன் பட்டம் பெற்றது.
இதனிடையே, இந்தப் போட்டிநடைபெறும் அண்ணா விளையாட்டரங்க வளாகத்துக்குள்ளும், வெளியிலும் வீரர், வீராங்கனைகளை வரவேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் படத்துடன் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி பெயரில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா விளையாட்டரங்கை தவறாக கையாண்டதாக, திருச்சி மண்டலமுதுநிலை விளையாட்டு மேலாளரும், மாவட்ட விளையாட்டு அலுவலருமான பி.வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்- செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டதடகள சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் பேனர் வைக்க தடகள சங்கம் அல்லது போட்டியை நடத்தும் அமைப்புக்கு மட்டுமே அனுமதிஉள்ளது. அதுவும், விளையாட்டரங்க நுழைவாயிலிலும், முகப்பில்உள்ள ரவுண்டானா அருகிலும் மட்டுமே பேனர்களை வைக்க வேண்டும்.
இந்நிலையில், சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி பெயரில் ஜூன் 7-ம் தேதி நள்ளிரவில் அண்ணா விளையாட்டரங்கத்தின் ஓடுதள பகுதி உட்பட வளாகம் முழுவதும் 20 இடங்களில் பேனர்கள்வைத்துள்ளனர். இது மறுநாள்காலை தான் எங்களுக்கு தெரியவந்தது. அதன்பின், அவற்றை அகற்ற அகாடமி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் உள்ளூர் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு தெரியவந்ததால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களை அழைத்து கண்டித்துள்ளனர். இதையடுத்து தான், மாவட்ட விளையாட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து விளையாட்டு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.