

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறையில் இருந்து 3000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி, கோதையாறு, புத்தன் அணை ஆகியவற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்றில் இருந்து மழையின் தீவிரம் குறைந்தது.
அதிகபட்சமாக தக்கலை, கோழிப்போர்விளையில் தலா 22 மிமீ., மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 45.44 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 1557 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 740 கனஅடி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், உபரியாக 1056 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மொத்தம் 1796 கனஅடி தண்ணீர் பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுக்கடை அருகேயுள்ள பரக்காணி பகுதியை சேர்ந்த சிங்காராஜன் (82) என்பவர் வழக்கு தொடர்பாக குழித்துறை நீதி மன்றத்திற்கு செல்ல நேற்று பரக்காணியில் இருந்து வெட்டுமணிக்கு வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து நடந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள தரை பாலம் வழியாக சென்றுள்ளார். ஆற்றில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்க பட்டிருந்த நிலையில் முதியவர் சிங்கரராஜன் தடுப்பு வேலிகளை தாண்டி நடந்து சென்றபோது தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் நடக்க முடியாமல் திணறியுள்ளார்.
அவரை தண்ணீர் அடித்து செல்ல முயன்றதும் தரைப்பாலத்தில் உள்ள சிறு தூணை பிடித்தவாறு சத்தம் எழுப்பினார். இதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது குழித்துறை தீயணைப்பு துறையினர் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி முதியவரை கயிறு கட்டி மீட்டனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் 2 நாட்கள் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், 11-ம் தேதியும் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.