Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

விலைவாசியுடன் நேரடித் தொடர்பு உள்ளதால் டீசல் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல் விலை, மொத்த நுகர்வோர் டீசல் விலை, மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு உயர்த்தியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யில் கடைப்பிடிக்கப்பட்ட முறையை ஒட்டியே எண்ணெய் நிறுவனங்கள் தற்போது டீசல் விலையை உயர்த்தி யுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயக் கொள்கையில் இன்னமும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையே என்ற ஏமாற்றம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தற்போது எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை உயர்வு காரணமாக, அனைத்துப் பொருட்களின் விலையும் உயரக்கூடும். தனியார் வாகனங்களில் பள்ளி, அலுவலகங்களுக்குச் செல்வோர் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவர்.

டீசல் விலையும், விலைவாசியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் பிரதமர் தனிக் கவனம் செலுத்தி, அதனை மாற்றி அமைக்க வேண்டும். முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாதா மாதம் டீசல் விலை உயர்வு என்ற கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போதைய விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x