Last Updated : 10 Jun, 2024 10:00 PM

 

Published : 10 Jun 2024 10:00 PM
Last Updated : 10 Jun 2024 10:00 PM

நீட் தேர்வு பிரச்சினை: தாமதமாகும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம்

சென்னை: நீட் தேர்வு பிரச்சினையால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு தினங்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.

அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவு எண்களை கொண்ட 6 பேர் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் பி.அருணலதாவிடம் கேட்ட போது, “மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) அறிவித்த பிறகு முதலில் அகில இந்திய கலந்தாய்வுக்கும், பின்னர் மாநில அரசின் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கப்படும்” என்றார்.

கலந்தாய்வு கூட்டம்: இதற்கிடையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேர்வுக்குழு செயலாளர் பி.அருணலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x