ஆதிதிராவிடர் நலத் துறை பெயரை மாற்றம் செய்ய குழு பரிந்துரை செய்யவில்லை: அரசு தகவல் @ ஐகோர்ட்

ஆதிதிராவிடர் நலத் துறை பெயரை மாற்றம் செய்ய குழு பரிந்துரை செய்யவில்லை: அரசு தகவல் @ ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து அதறகான குழு பரிந்துரை செய்யவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 76 பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் நலனுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை உருவாக்கப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை பட்டியல் சாதியினர் நலத்துறை என அறிவிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறுதலாக ஆதிதிராவிடர் என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் என்பது பட்டியலின வகுப்பில் உள்ள 76 இனங்களில் ஒன்று. அரசு துறைகளின் மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது, என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழு பெயர் மாற்றம் தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் சாதாரண விஷயமல்ல. இது தொடர்பாக பல விவாதங்கள் நடந்து வருகிறது எனக் கூறி, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in