Last Updated : 18 May, 2018 07:17 PM

 

Published : 18 May 2018 07:17 PM
Last Updated : 18 May 2018 07:17 PM

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் சி.வி. விக்னேஸ்வரன் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் 9 ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். எனவே, மே 18-ம் தேதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்ய வேண்டும் என இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த மே 10 அன்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக மே 18-ம் தேதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இந்த வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் இன்று இலங்கையின் பல பகுதிகளில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் ஒன்பதாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இலங்கையின் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 9-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது.

இந்த நினைவேந்தலில் நினைவுச் சுடரை ஏற்றி வைத்து இலங்கையின் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் பேசியதாவது:

''இன்றைய உலகம் மனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் 21-ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்தில் 2006-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்கு என்று தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்ட 3 வருட காலத்திற்குள்ளாகவே இலங்கையில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இலங்கையில் இனப்படுகொலைகள் நடைபெற்று 9 வருடங்கள் கடந்துபோயுள்ள நிலையிலும் எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் காத்து நிற்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்களின் வாழ்விடங்களை மீட்பதற்காக வருடக்கணக்கில் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், விவசாயப் பண்ணைகள், உல்லாச விடுதிகள் மாற்றப்பப்பட்டு வருகின்றன.

சர்வதேச நாடுகளின் தலையீடுகள் மற்றும் நெருக்குதல்கள் இல்லாமல் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம். எனவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அதற்கான நெருக்குதல்களை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று 9 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், போருக்கு பின்னரான அவலத்தை பேரிடராக கருதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச நாடுகள் உதவிகளைச் செய்ய வேண்டும்''.

இவ்வாறு சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x