Published : 09 Jun 2024 10:04 AM
Last Updated : 09 Jun 2024 10:04 AM

தமிழக அரசின் சொந்த நிதியில் காவிரி தூய்மை பணியை தொடங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசு சொந்த நிதியில் காவிரியைத் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தினமும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்து காவிரியில் பெருமளவு கழிவுகள் கலக்கின்றன.

மேட்டூரில் உள்ள ஆலையில் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. மக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் காவிரியில் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து மானியமாகவும், இன்னொரு பகுதியை தமிழக அரசின் பங்களிப்பாகவும் கொண்டு, மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசு சொந்த நிதியில் காவிரியைப் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்லார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x