Published : 13 May 2018 09:36 AM
Last Updated : 13 May 2018 09:36 AM

ஆச்சிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

“நகரத்தார் பற்றி நான் தெரிவித்த கருத்து தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. நடிகை மனோரமா பற்றி மட்டுமே நான் பேசினேன். நகரத்தார் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடிப்பது தொடர்பாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது நகரத்தார் சமூகத்தை வேதனைப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, அவர் வேண்டுமென்றால் அவருடன் நடித்த மனோரமா ஆச்சியை பிடிக்கலாம் என்ற பொருளில்தான் சொன்னேன். அதுவும் ரஜினிக்கு அம்மாவாக நினைத்துதான் மனோரமா ஆச்சியை குறிப்பிட்டேன். நான் சொன்ன தகவல் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது.

நகரத்தாரை நான் மிகவும் மதிக்கக்கூடியவன். எந்த சமுதாயம் குறித்தும் கடும் சொல் பேசாதவன். நகரத்தார் வருத்தப்பட்டிருந்தால் அதற்கு ஆழமாக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பலமாக இருப்பவர்கள் நகரத்தார்கள். அவர்களுடைய மனது இந்த அளவுக்கு காயப்பட்டிருப்பதைக் கண்டு மிகுந்த கவலை அடைந்துள்ளேன் என்றார்.

இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைச்சர் செல்லூர் ராஜுவைக் கண்டித்து நகரத்தார் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட வருவாய் அலுவலர் எ.ராமசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டிக்கும் விதமாக, ஆலங்குடி சந்தைப்பேட்டையில் உள்ள விநாயகர் கோயில் குளத்தில் தெர்மாகோல்களை மிதக்கவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x