மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரயில் மெமு ரயிலாக திடீர் மாற்றம்: பயணிகள் அதிருப்தி

மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரயில் மெமு ரயிலாக திடீர் மாற்றம்: பயணிகள் அதிருப்தி
Updated on
2 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து சேலம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் திடீரென மெமு ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பழையபடியே இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு முதல் சேலம் வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டது. காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. தொடர்ந்து மறுமார்க்கமாக சேலத்தில் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.

முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் பள்ளி - கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். சேலம் வரை நீட்டிக்கப்பட்டதில் இருந்து பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வந்ததால் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகள் கொண்டதாக இயக்க வேண்டும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினரும் பொதுமக்களும் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து மனுவும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை 8 பெட்டிகள் மட்டுமே கொண்ட மெமு ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றி இன்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை இந்த ரயிலில் பயணிக்க வந்த பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிக அளவில் பயணிகள் செல்லக்கூடிய சேலம் ரயிலில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டு பயணிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ரயில் எந்த ஊருக்கு செல்கிறது என்ற பெயர் பலகை வைக்கப்படாததால் பயணிகள் மயிலாடுதுறை - சேலம் ரயிலை அடையாளம் காண்பதில் சிரமப்பட்டனர். எனவே, பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் இந்த ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் இணைத்து பழையபடியே இயக்க வேண்டுமென மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in