

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் புதிய மருத்துவக் கட்டிடங்கள் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடக்கவுள்ளது. இவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க நேற்று இரவு மேட்டுப்பாளையம் வந்தடைந்த அமைச்சர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பான வழக்கமாக வைத்திருக்கும் அமைச்சர் மா.சு, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காட்டூர் ரயில்வே கேட் அருகில் இருந்து தனது ஜாகிங்கை துவங்கினார்.
அங்கிருந்து வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, தேவனாபுரம், மேடூர், சாலை வேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு கிராமங்கள் வழியாக தோலம்பாளையம் வரை என சுமார் 21 கி.மீ கடந்து சென்றார். அப்போது, அப்பகுதி அவ்வழியாக உள்ள கிராமங்களின் நிலை, சுகாதாரம் குறித்து கேட்டறிந்தபடி சென்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்களது கிராமப்பகுதிகளில் ஜாகிங் சென்றதைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அமைச்சருடன் காரமடை ஒன்றிய திமுக செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோரும் ஜாகிங் சென்றனர்.