

சென்னை: தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஏற்பாட்டில் தென்னை விவசாயம் தொடர்பான கையேடு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியில், தென்னை விவசாயம் தொடர்பான கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கையேட்டை நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார். விவசாயிகளுக்கு பெரிதும் பயன்தரும் வகையில், 16 தலைப்புகளில் விரைவுத் துலங்கல் குறியீட்டுடன் (QR code) 65பக்கங்களில் இந்த செயல்விளக்க கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
கையேட்டை வெளியிட்டு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது,‘‘அண்மைக் காலங்களில் தென்னை வளர்ப்பில் விவசாயிகள் மேற்கொள்ளும் சிரமங்கள் மற்றும்பூச்சி தாக்குதல் ஆகியவற்றால் விவசாயிகள் பெருமளவு பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, களஆய்வு அடிப்படையில் இந்த கையேட்டினை உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது’’ என்றார்.
முதல் பிரதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது,‘‘தென்னை நார் பொருட்களின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்ய ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்திலான பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.’’ என்றார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது ஏற்புரையில், ‘‘தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் முக்கிய பயிராகும். தென்னைமரத்தில் சில ஆண்டுகளாக சிவப்பு கூன் வண்டுகள் தாக்குதல், காண்டாமிருக வண்டுகள் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய் போன்ற பல்வேறு நோய்கள் மரத்தை அழித்துவருகின்றன. இதனால் விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, முதல்வர் மற்றும் வேளாண் அமைச்சரின் வழிகாட்டுதலுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேடு விவசாயிகளுக்கு பெரிதும் பயன்தரும்’’என்றார்.
இந்நிகழ்வில், செய்தித்துறை செயலர் இல.சுப்பிரமணியன், எழுது பொருள்மற்றும் அச்சுத் துறை ஆணையர் வெ.ஷோபனா, செய்தித்துறை இயக்குனர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.