மாமல்லபுரம் | ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மீனவ பகுதி மக்கள் எதிர்ப்பு

மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.
மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை மீட்க வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவ கிராம மக்கள்.
Updated on
1 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி மீனவர் பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றி நிலத்தை மீட்க வந்த அறநிலையத் துறை அதிகாரிகளை, மீனவ பகுதி மக்கள் முற்றுகையிட்டு நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் இருந்து கோவளம் பகுதிவரையில் ஈசிஆர் சாலையையொட்டி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்நிலங்கள் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளையின் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அறநிலையத் துறை பணியாளர்கள், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, டிஎஸ்பி ரவிராம் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், பொக்லைன் வாகனங்களுடன் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி மீனவ பகுதிக்கு வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் குடியிருப்புகளில் வசித்து வரும் மீனவர்கள் நுழைவாயில் முன்பு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸார் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளதாகவும், அதனால், நீதிமன்றத்தை நாடுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு கடை மற்றும் இறால் பண்ணைக்கு சீல் வைத்தனர். மேலும், அப்பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை அமைத்தனர். பின்னர், மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: சுனாமியால் பாதிக்கப்பட்டபோது அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் அமைத்து தரப்பட்டன. இதில்தான், நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால், தற்போது ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், கடலை மட்டுமே நம்பி வாழும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், தமிழக அரசு தலையிட்டு எங்கள் குடியிருப்புகளை மீட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in