பால் விநியோகம் தாமதம் ஏன்? - ஆவின் நிறுவனம் விளக்கம்

பால் விநியோகம் தாமதம் ஏன்? - ஆவின் நிறுவனம் விளக்கம்

Published on

சென்னை: மாதவரம் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நேற்று காலை பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானதாகவும் பால் முகவர்கள் தெரிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு 15 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் தாமதமாவதாக செய்திகள் வெளியானது. மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை காலதாமதமானதால் சிறிது நேரம் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படும் வாகனங்கள் தாமதமாக பால் பண்ணையை விட்டு வெளியேறின.

அதைத்தொடர்ந்து உடனடியாக அனைத்து மொத்த விற்பனையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பால் விநியோக வாகனத்தை கண்காணித்து அனைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்தும் எவ்விதமான புகார்களும் பெறப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in