Published : 08 Jun 2024 06:20 AM
Last Updated : 08 Jun 2024 06:20 AM

மெரினா கடற்கரைகளில் நள்ளிரவில் மக்களுக்கு அனுமதி கிடையாது... ஏன்? - காவல் துறை அடுக்கும் காரணங்கள்

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த ஆண்டு கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி உக்கிரம் காட்டியதால் வெப்பத்தை தணிக்க மாலை நேரங்களில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆனால், இரவு 10 மணிக்குமேல் மெரினா கடற்கரையில் இருக்க அனுமதி கிடையாது என கூறி பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்துகின்றனர். அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் புழுங்கிக் கிடக்கும் சூழலில், 24 மணி நேரமும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில்பார்கள் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கும் தமிழக அரசு, இரவு நேரங்களில் காற்று வாங்கவும், குளிர்ச்சிக்காகவும் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்து துரத்திவிடுகிறது.

எனவே, மெரினா உள்ளிட்ட கடற்கரைகளி்ல் இரவு 10 மணிக்குமேல் நள்ளிரவு வரை பொதுமக்களை அனுமதிக்கவும், குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் வரும் பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் வாதிட்டதாவது: இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 54 பேர் மெரினா கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இரவு நேரங்களில் கடற்கரைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடற்கரையில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருவதால் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியாது. மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்குமேல் இனப்பெருக்கத்துக்காக கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரைக்கு வரும் என்பதால் அந்த நேரங்களில் பொதுமக்களை அனுமதித்தால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும். சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 41-ன்படி பொது இடங்களி்ல் பலர் ஒன்று கூடுவதை தடுக்கவும், நேர கட்டுப்பாடுகள் விதிக்கவும் காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘‘தற்போது கோடை காலம் முடிவுக்கு வந்துவிட்டதால் இந்த வழக்கில் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவு எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x