

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (20). அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர்இருசக்கர வாகனத்தில் வந்த போது,சாலை விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நரம்பியல் துறை மருத்துவர்கள் பரிசோதனைசெய்தனர்.
அப்போது, அந்த இளைஞர் மூளைச் சாவு அடைந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்துபெற்றோர் சம்மதத்துடன் அவரதுஉடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரனிராஜன், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், “இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல், கண் விழி மற்றும் எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டு அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு 6 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் இன்று வரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்துக்கு நன்றி” என்றார்.