நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் இயக்கப்படும் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்தில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மதச் சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக அரசுப் பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் முழுவதுமாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கார் கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் கூலிங் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in