

கோவை: “திமுகவினருக்கு அவ்வளவு கோபம் என்றால் என் மேல் கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து, சிலர் அண்ணாமலை புகைப்படம் மாட்டப்பட்ட ஆட்டை நடுரோட்டில் வெட்டி அதனை பிரியாணி ஆக சமைத்து வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தச் சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுகவினருக்கு அவ்வளவு கோபம் என்றால் என் மேல் கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன். கரூரில் தான் விவசாயம் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நடு ரோட்டில் ஓர் ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை மீது தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள கொலை வெறியை இது வெளிப்படுத்துகிறது. ஊழலை, லஞ்சத்தை, முறைகேடுகளை தட்டிக்கேட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை சொல்லாமல் உணர்த்துகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட திமுகவினர் ஒரு ஆட்டை பிடித்து கொண்டிருந்த காட்சி திமுகவினர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது. சிறுவர்களை தூண்டி விட்டு அவர்களின் மனங்களில் வன்முறையை, வன்மத்தை புகுத்தியது கொடும் குற்றம்.
அண்ணாமலை மீது உள்ள பயம், தமிழகத்தில் திமுகவினர் அரங்கேற்ற துடிக்கும் வெறியாட்டத்தை உணர்த்துகிறது. தமிழக காவல் துறை மற்றும் முதல்வர் ஸ்டாலின், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டும். அண்ணாமலையின் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறை முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.